திருச்சி குட்ஷெட்டில் லாரிகள் திடீர் வேலை நிறுத்தம்


திருச்சி குட்ஷெட்டில் லாரிகள் திடீர் வேலை நிறுத்தம்
x

திருச்சி குட்ஷெட்டில் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சி குட்ஷெட்டில் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

பேட்டரி திருட்டு

திருச்சி ரெயில்வே குட்ஷெட் யார்டுக்கு ஆந்திரா, குஜராத், மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் உரம், கோதுமை, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சரக்கு ரெயிலில் வந்து இறங்கும். அவற்றை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைப்பார்கள். இந்த பணியில் 400-க்கும் மேற்பட்ட லாரிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்த லாரிகளை நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால் லாரிகளை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் லாரிகளில் இருந்து அவ்வப்போது பேட்டரிகள் திருட்டு, உதிரி பாகங்கள் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஆகவே லாரிகளை பாதுகாப்பாக நிறுத்த இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும். குட்ஷெட்டில் சாலையை சீரமைக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

வேலை நிறுத்தம்

ஆனால் இந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள், கிளீனர்கள் நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு ரெயிலில் வந்த கோதுமை மற்றும் மத்திய தொகுப்புக்கு கொண்டு செல்லப்படும் சிமெண்டு மூட்டைகளை லாரிகளில் ஏற்ற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சரக்குகள் கொண்டு செல்லப்படாமல் தேக்கம் அடைந்தன. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் லாரி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து லாரி உரிமையாளர்கள் கூறுகையில், "எங்களது கோரிக்கைகளை வருகிற 1-ந் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றனர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.


Next Story