மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்


மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதிய கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூர்

காரமடை

புதிய கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

புதிய கல்குவாரிகள்

காரமடை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிக்காரம்பாளையம், பெள்ளாதி ஊராட்சிகளில் 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள், தார் பிளாண்ட்டுகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்புகளில் விரிசல் ஏற்படுவதோடு சுவாச கோளாறால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் 5 புதிய கல்குவாரிகள் அமைக்க கனிமவளத்துறை அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அறிந்ததும், மொங்கம்பாளையம், படியனூர், வடவள்ளி, தேரம்பாளையம், குமரன்குன்று, பொன்முடி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் தேரம்பாளையம் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

இதை அறிந்ததும், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், கிராம நிர்வாக அலுவலர் தனசீலன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்டதுறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. எனினும் சமாதனம் அடையாத பொதுமக்கள் சாலை மறியலை தொடர்ந்தனர். உடனே அவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு நிலவியது.

போக்குவரத்து பாதிப்பு

அதன்பின்னர் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி, தாசில்தார் மாலதி ஆகியோர் வந்து, புதிதாக தொடங்கப்படும் கல்குவாரிகள் தொடர்பாக நாளை(இன்று) கண்ணார்பாளையத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற இருந்தது. அது தேதி மாற்றி வைக்கப்படும். அன்றைய தினம், கனிமவளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். இ்தில் பொதுமக்கள் தங்களது கருத்துகளை கூற வேண்டும் என்றனர். இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story