அ.தி.மு.க. கவுன்சிலர்கள் திடீர் தர்ணா


அ.தி.மு.க. கவுன்சிலர்கள் திடீர் தர்ணா
x

தர்மபுரி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் நகராட்சி அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி

நகராட்சி கூட்டம்

தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான்மாது தலைமை தாங்கினார். ஆணையாளர் சித்ரா சுகுமார் வரவேற்றார்.

துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசும் போது, எங்கள் வார்டுகளில் திட்டப்பணிகள் முறையாக நடைபெறவில்லை. ஏலம் விடப்பட்ட திட்டப்பணிகள் தொடங்கப்படவில்லை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கூச்சல்-குழப்பம்

இந்த நிலையில் 9-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் மாதையன் பதிலடியாக பேசும் போது, 'கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது. இதற்குமேல் தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சத்தம் போட்டபடி தி.மு.க. கவுன்சிலர்கள் எல்லாரும் வாருங்கள்' என்றார். இதையடுத்து தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டஅரங்கில் இருந்து வெளியேறினர். இதற்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து பொருட்களும் சரியாக படித்து பார்த்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அப்போது கூட்டத்தில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறிவிட்டு தலைவர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் கூட்டத்தை முடித்து விட்டு வெளியேறினர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி கூட்ட அரங்கில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தவிர எதைப்பற்றியும் பேசக்கூடாது என்று கூறுகிறார்கள். அ.தி.மு.க. வார்டுகளில் எந்த பணியும் நிறைவேற்றவில்லை. இதைப்பற்றி பேச முன்வந்தால் கூட்டத்தை முடித்து விட்டு செல்கிறார்கள். எந்தக் கேள்விக்கும் அதிகாரிகள் பதில் சொல்வதில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது கூறும் போது,'தர்மபுரி நகராட்சிக்கு வந்த ரூ.4 கோடி நிதியில் ரூ.2½ கோடி 10 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.1½ கோடி 4 தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருகின்ற நிதியில் பெரும்பாலான பணிகள் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டுகளில் தான் நடைபெறுகிறது. கட்சி பாகுபாடின்றி அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது. வேண்டுமென்றே தமிழக அரசுக்கும், தர்மபுரி நகராட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்' என்றார்.

போலீசார் வந்தனர்

இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு கூடியிருந்த அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தர்மபுரி டவுன் போலீசார் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தனர்.

அப்போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்திற்கு போலீசார் எதற்காக வந்தார்கள். எங்களை கைது செய்வதற்காக வர சொன்னார்களா? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் வாக்கு வாதத்திற்கு பின்பு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story