ஜெகதளா பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்
ஜெகதளா பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குன்னூர்
ஜெகதளா பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பணியாளர்கள்
குன்னூர் அருகே அருவங்காடு ஜெகதளா பேரூராட்சி உள்ளது. இதில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பேருராட்சியில் 32 தற்காலிக தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தினசரி 400 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. தற்போது உள்ள நிலையில் பேரூராட்சி நிர்வாகம் வழங்கும் சம்பளம் பற்றாக்குறையாக உள்ளது.
பணியும் அதிகமாக இருந்தது. இதனால் சம்பள உயர்வு செய்து தர வேண்டும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்ய கூடாது என்றும் வலியுறுத்தி பேருராட்சி தற்காலிக துப்புறவு தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் பேரூராட்சி செயல் அலுவலர் சதாசிவம் தற்காலிக தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் 60 ரூபாய் தினசரி சம்பளத்தில் கூட்டப்பட்டு 460 ரூபாய் வழங்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்காலிக தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.