துதிக்கை துண்டித்த நிலையில் அவதிப்படும் குட்டியானை


துதிக்கை துண்டித்த நிலையில் அவதிப்படும் குட்டியானை
x
தினத்தந்தி 19 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-20T00:16:39+05:30)

துதிக்கை துண்டித்த நிலையில் அவதிப்படும் குட்டியானை

கோயம்புத்தூர்

மனிதனுக்கு நம்பிக்கை எவ்வளவு முக்கியமோ, அதுபோல் யானைக்கு துதிக்கை முக்கியம் என்று கூறுவது உண்டு.

துதிக்கை இல்லாத குட்டி

ஆம்...யானைக்கு அனைத்து வகையிலும் உதவிக்கரமாக திகழ்வது அதன் துதிக்ைக மட்டும்தான். ஆனால் இங்கு ஒரு குட்டியானை துதிக்கை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறது. அந்த குறை தெரியாத அளவுக்கு, அந்த குட்டியை தாய் யானை வாஞ்சையோடு பாதுகாத்து வருகிறது. அது பற்றிய செய்தியை காண்போம்...!

தமிழக-கேரள எல்லையில் மலைப்பிரதேசமான வால்பாறை அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள தும்பூர்மொழி வனப்பகுதியில் வால்பாறை-சாலக்குடி சாலையை குட்டியுடன் ஒரு காட்டுயானை கடந்து சென்றது. ஆனால் அந்த குட்டியானைக்கு துதிக்கை துண்டிக்கப்பட்டு இருந்தது. அதற்கு அரணாக நின்று தாய் யானை ஆறுதல் அளித்தது. இதை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

ேதடும் பணி

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற கேரள வனத்துறையினர், அந்த யானைகளை ேதடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலக்குடி ஆற்றை கடந்து குட்டியுடன் அந்த காட்டுயானை செல்வதை வனத்துறையினர் கண்டனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதால், அந்த யானைகளை கண்காணிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அவை எங்க சென்றது என்பது தெரியவில்லை. இதன் காரணமாக தமிழக-கேரள எல்லையில் உள்ள மளுக்கப்பாறை, பன்னிமேடு, மயிலாடும்பாறை, நம்பர் பாறை வனப்பகுதிகளிலும் இருமாநில வனத்துறையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிகிச்சை அளிக்கப்படும்

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

அந்த குட்டியானைக்கு துதிக்கை துண்டித்துபோக காரணம் என்ன? என்பது தெரியவில்லை. ஏதாவது கம்பிவேலியில் சிக்கி துண்டாகி இருக்கலாம். துதிக்கை இல்லாவிட்டாலும், தண்ணீர் குடிப்பதில் குட்டியானைக்கு சிக்கல் இருக்காது. ஆனால் பசுந்தீவனங்களை எடுத்துக்கொள்ள சிரமமாக இருக்கும். இதனால் குட்டியானையை மீட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் எந்த வனப்பகுதியில் சுற்றித்திரிகிறது என்பது தெரியாததால், அதை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் குட்டியானையை மீட்டு வளர்ப்பு யானைகள் முகாமில் உரிய சிகிச்சையுடன் பராமரிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story