நீண்டநேரம் வரிசையில் நிற்பதால் அவதி அடைவதாக வழக்கு: தமிழக கோவில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைந்து தரிசிக்க தனி பாதை -12 வாரங்களில் ஏற்படுத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


நீண்டநேரம் வரிசையில் நிற்பதால் அவதி அடைவதாக வழக்கு: தமிழக கோவில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைந்து தரிசிக்க தனி பாதை -12 வாரங்களில் ஏற்படுத்த மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

தமிழக கோவில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைந்து தரிசிக்க தனி பாதையை 12 வாரங்களில் ஏற்படுத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

மதுரை


தமிழக கோவில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைந்து தரிசிக்க தனி பாதையை 12 வாரங்களில் ஏற்படுத்த வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.

40 ஆயிரம் கோவில்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில் பழனி முருகன் கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நாள்தோறும் அதிகளவில் பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பிரசித்தி பெற்ற கோவில்களில் தரிசனம் செய்வதற்கு குறைந்தது 3 மணி நேரம் ஆகிறது.

முக்கிய கோவில்களில் நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் சிறப்பு கட்டண தரிசனத்துக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. அந்த டிக்கெட்டுகளை வாங்கிச்செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு வழிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் அந்த வழிகளில் சென்றாலும் இறுதியாக பொது தரிசன வரிசையுடன்தான் நிற்கும் நிலையும் உள்ளது.

அதுமட்டுமல்லாமல், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இருப்பதைப்போல பக்தர்களுக்கு குடிநீர், கழிப்பறை மற்றும் காற்றோட்டமான விசாலமான இருக்கை வசதிகள் போன்றவற்றை பக்தர்களுக்கு செய்து தர தமிழக கோவில்களில் இடவசதி கிடையாது.

தனி வரிசை

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள், இருதய ஆபரேசன் செய்து கொண்டவர்கள், சிறுநீரக பாதிப்பு உடையவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை பெறுபவர்கள் உள்ளிட்டவர்களால் நீண்டநேரம் வரிசையில் நிற்க முடியாது.

அதனால் சிறப்பு விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்களுக்கான வரிசை, ஆன்லைன் டிக்கெட் எடுத்தவர்கள் ஆகியோருக்கு கோவிலில் தனி வரிசை ஏற்படுத்தினால்தான் தீர்வு கிடைக்கும்.

எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்கள், ஆபரேசன் செய்து கொண்டவர்கள், சில நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உள்ளிட்டோர் பல மணி நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் சிறப்பு விரைவு தரிசனம் செய்வதற்கு வசதிகள் செய்யும்படி அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

அரசு வக்கீல் விளக்கம்

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வக்கீல், ஒவ்வொரு கோவிவிலும் வெவ்வேறு விதமான பூஜை முறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே அங்கெல்லாம் மனுதாரரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்பது சாத்தியம் இல்லை, என்றார்.

கோர்ட்டுகளால் உருவாக்க முடியும்

அதற்கு நீதிபதிகள், கோவில்களில் தரிசனத்துக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான். தரிசனத்துக்காக வரும் அனைத்து பக்தர்களுக்கும் டோக்கன் வழங்கும் முறை என்பது சாத்தியம் இல்லாதது. சிறப்பு வரிசைக்கான டோக்கன் வழங்கினால், அதை பலர் தவறாகவும் பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் கோவில்களில் சில கட்டமைப்புகளை கோர்ட்டுகளால் உருவாக்க முடியும், என்றனர்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

12 வாரத்தில் ஏற்படுத்த வேண்டும்

கோவில்களுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை நியாயமானது.

எனவே தமிழக கோவில்களில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் விரைவாக தரிசனம் செய்வதற்கு வசதியாக தனி பாதையை ஏற்படுத்த இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் 12 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story