சர்க்கரை ஆலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
வேறு பணிக்கு இடமாற்றம் செய்ததால் விரக்தி அடைந்த மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூங்கில்துறைப்பட்டு
சர்க்கரை ஆலை ஊழியர்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பார் பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் மகன் வெங்கடேசன்(வயது 42). மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்த இவருக்கு திருமணமாகி பராசக்தி(32) என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் வெங்கடேசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலை வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்குக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அந்த பணி பிடிக்காத அவர் தான் ஏற்கனவே பணியாற்றிய இடத்தில் பணி வழங்குமாறு அதிகாரிகளிடம் தொடா்ந்து வலியுறுத்தி வந்ததாகவும், ஆனால் இதை அவர்கள் ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த வெங்கடேசன் நேற்று முன்தினம் சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இது குறித்து அவரது மனைவி பராசக்தி கொடுத்தபுகாரின் பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோகம்
வேறு பணிக்கு இடமாற்றம் செய்ததால் விரக்தி அடைந்த ஊழியர் சா்க்கரை ஆலை வளாகத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.