வேர் பூச்சி தாக்குதலால் காய்ந்து வரும் கரும்புகள்-விவசாயிகள் கவலை


வேர் பூச்சி தாக்குதலால் காய்ந்து வரும் கரும்புகள்-விவசாயிகள் கவலை
x

வாணாபுரம் பகுதியில் வேர் பூச்சிகள் தாக்குதல் காரணமாக கரும்பு பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

வாணாபுரம் பகுதியில் வேர் பூச்சிகள் தாக்குதல் காரணமாக கரும்பு பயிரில் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கரும்பு சாகுபடி

வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் தலையாம்பள்ளம், தச்சம்பட்டு, பாவப்பட்டு, பறையம்பட்டு, நரியாப்பட்டு, சோவூர், வாழவச்சனூர், சின்ன கல்லப்பாடி, பெரியகல்லப்பாடி, விருது விளங்கினான், அண்டம்பள்ளம், ஆணாநந்தல், பவித்திரம், கல்லேரி, சு.வாழாவெட்டி, டி.வாழா வெட்டி உள்ளிட்ட கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் ஒரு ஆண்டு பயிரான கரும்பு பயிரிட்டு பராமரித்து வருகின்றனர்.

வேர் பூச்சிகள்

தற்போது 5 முதல் 6 மாதம் வரையிலான பயிர்கள் தேவையான அளவு தண்ணீர் இருந்தும் காய்ந்து வருகிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் கரும்பு பயிரை ஆய்வு செய்தபோது கரும்பின் வேர் பகுதியில் வெள்ளை நிறத்தில் அதிக அளவில் வேர் பூச்சிகள் இருப்பது தெரியவந்தது.

இந்த பூச்சிகள் கரும்பின் வேரை முழுவதுமாக தின்று விடுகின்றன. இதன் காரணமாகவே நீரை உறிஞ்சும் திறனை இழந்து கரும்பு பயிர்கள் முழுவதும் காய்ந்த நிலையில் காணப்படுகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ''கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கரும்பு பயிரிடப்பட்டு அதனை பராமரித்து வந்த நிலையில் நன்றாக செழித்து வளர்ந்தது. இப்போது கரும்பு மேற்பகுதி காய்ந்த நிலையில் காணப்படுகிறது. வேர்பூச்சி தாக்குதல் இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட வேளாண் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கரும்புகள் பயிரிட்டு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து பராமரித்தும் அறுவடை செய்ய முடியாமல் மகசூல் இழப்பு ஏற்படுவதால் செலவிடப்பட்ட தொகையாவது பெற முடியுமா? என்பது கேள்வியாக உள்ளது.

ஆய்வு செய்ய வேண்டும்

இப்பகுதிகளில் அதிக அளவில் கரும்பு மட்டுமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.எனவே இப்பகுதி விவசாயிகளின் நலன் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட வேளாண்மை அதிகாரிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் சேதமான கரும்பு பயிர்களுக்கு நேரடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.


Next Story