2-வது நாளாக கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
2-வது நாளாக கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு நேற்று 2-வது நாளாக கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாயில் எலியை கவ்வியபடி போராட்டம் நடத்தினர்.
காத்திருப்பு போராட்டம்
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடியில் தனியார் சர்க்கரை ஆலை உள்ளது. நேற்றுமுன்தினம் இந்த ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன் தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சர்க்கரை ஆலை தனக்காக முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்த்து விவசாயிகளை பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும். திருஆரூரான் சர்க்கரை ஆலையால் விவசாயிகளின் கரும்பு கிரயத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பப்படாமல் உள்ள பயிர்க்கடன் தொகையை முழுவதையும் வங்கியில் செலுத்த வேண்டும். மத்திய- மாநில அரசுகள் அறிவித்த கரும்புக்கான முழு தொகை மற்றும் அனைத்தையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வெட்டுக்கூலி, வாகன வாடகை, முழுவதையும் வட்டியுடன் ஒரே தவணையில் வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் திருமண்டங்குடி சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
2-வது நாளாக போராட்டம்
இதேகோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 2-வது நாளாக ஆலை முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் தங்ககாசிநாதன், மாவட்ட தலைவர் செந்தில்குமார், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக. முருகேசன், தமிழ் காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன், தமிழ்நாடு உழவர் முன்னணி தலைமை செயற்குழு உறுப்பினர் க.முருகன், காவிரி பாசன விவசாயிகள் சங்க செயலாளர் சுந்தர் விமலநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது 100-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் எலியை வாயில் கவ்வியபடி, சட்டை அணியாமல் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர். இதற்கு ஆதரவாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் சதீஷ், மூவேந்தர் முன்னேற்றக் கழக நிர்வாகி வேதா முரளி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்ததும் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, கபிஸ்தலம் வருவாய் ஆய்வாளர் சுகுணா, பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி உள்ளிட்ட ஆலை நிர்வாகத்தினர் கரும்பு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையொட்டி கரும்பு விவசாயிகள் ஆலையின் முன்பு உணவு சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.