கலெக்டர் அலுவலகத்தை கரும்பு விவசாயிகள் முற்றுகை


கலெக்டர் அலுவலகத்தை கரும்பு விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 28 Aug 2023 6:45 PM GMT (Updated: 28 Aug 2023 6:46 PM GMT)

அரசு அறிவிக்கும் சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை கரும்பு விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை விவசாயிகள், கரும்புகளுடன் திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடந்த இப்போராட்டத்திற்கு சங்க தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகையன், பொருளாளர் நாகராஜன், நிர்வாகிகள் தங்கராசு, கலியமூர்த்தி, சீதாராமன், முத்துக்குமரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும், அரசு அறிவிக்கும் கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர்.பின்னர் அவர்கள், மாவட்ட கலெக்டர் பழனியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கட்டாயப்படுத்துகிறார்கள்

கடந்த 4 ஆண்டுகளாக முண்டியம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய தனியார் சர்க்கரை ஆலைகளுக்கும், செங்கல்பட்டு படாலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும் கரும்புகளை அனுப்பி அரசு அறிவிக்கும் சிறப்பு ஊக்கத்தொகையை பெற்று வந்தோம். ஆனால் இந்த ஆண்டு சர்க்கரைத்துறை ஆணையர், விவசாயிகளின் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கூட்டுறவு ஆலைக்கு கரும்புகளை அனுப்ப வேண்டும் என கூறுகிறார்.

20 கி.மீ. தொலைவில் உள்ள ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்ப அனுமதிக்காமல் 150 கி.மீ. தொலைவில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அனுப்ப வேண்டும் என்று எங்களை கட்டாயப்படுத்துகிறார்கள். இதுசம்பந்தமாக பலமுறை மனு கொடுத்தும், விவசாயிகள் கோரும் ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்பவும், புதுச்சேரி சர்க்கரை ஆலைக்குட்பட்ட பகுதிகளை பொது பகுதியாக அறிவிக்கவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சிறப்பு ஊக்கத்தொகை

இதன் காரணமாக நாங்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளோம். எனவே 2022-23-ம் ஆண்டுக்கு நாங்கள், அருகில் உள்ள ஆலைகளுக்கு கரும்புகளை அனுப்பினோம். அதோடு சிறப்பு பருவத்திற்கும் அனுப்பி வருகிறோம். ஆனால் அரசு அறிவிக்கும் சிறப்பு ஊக்கத்தொகை எங்களுக்கு கிடைக்கவில்லை. அதனை பெற்றுத்தர மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் சி.பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு விவசாயிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story