திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்


திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்
x

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஊர்வலம்-ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

100-வது நாளையொட்டி திருமண்டங்குடி சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

100-வது நாள் போராட்டம்

கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சர்க்கரை ஆலையின் முன்னாள் நிர்வாகம், முறைகேடாக விவசாயிகளின் பெயரில், வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச்செலுத்தக்கோரியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடந்து வருகிறது.

போராட்டத்தின் 100-வது நாளான நேற்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கையில் கரும்புடன் ஆர்ப்பாட்டம்

இதில் நாகை மாலி எம்.எல்.ஏ., தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்ட தலைவர் பி.செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டச்செயலாளர் சின்னை.பாண்டியன், ம.தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் முருகன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஏராளமானோர் கையில் கரும்புடன் ஆதனூர் கிராமத்தில் இருந்து திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலைக்கு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

தீர்வு காண வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாகை மாலி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளை அடகு வைத்து ரூ.200 கோடிக்கு மேல் அவர்களது பெயரில் வங்கிகளில் கடன் வாங்கி ஊழல் செய்துள்ளது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். எனவே போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன் வரவேண்டும்.

வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, தமிழக முதல்-அமைச்சருடன் பேசி இந்த விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை அரசிடம் வழங்கியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தீர்வு காணவேண்டும என்றார்.


Next Story