ஒற்றை காலில் நின்றபடி கரும்பு விவசாயிகள் போராட்டம்
ஒற்றை காலில் நின்றபடி கரும்பு விவசாயிகள் போராட்டம்
கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒற்றை காலில் நின்றபடி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒற்றை காலில் நின்றபடி போராட்டம்
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் திரு ஆருரான் சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 30-ந் தேதி முதல் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் கொட்டும் மழையில் குடை பிடித்தவாறு கரும்பு விவசாயிகள் 10-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் 11-வது நாளான நேற்று ஒற்றைக்காலில் நின்றபடி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் நாக.முருகேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச்செயலாளர் தங்க.காசிநாதன், விவசாய சங்க பிரதிநிதிகள் அமிர்தலிங்கம், நல்லதம்பி, செந்தில், மோகன்தாஸ், குணசேகரன், ரவிச்சந்திரன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் பின்னர் வங்கிகளில் வாங்கிய கடன் முழுவதையும் தீர்த்து விவசாயிகளை விடுவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் அறிவித்த கரும்புக்கான தொகை முழுவதையும் வட்டியோடு ஒரே தவணையில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். ஆலையை தனியாருக்கு தாரைவார்க்காமல் தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, கும்பகோணம் காந்தி பூங்காவில் அனைத்து விவசாய இயக்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஏ.கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் க.பாலகுரு, சி.ஐ.டி.யூ.மாவட்ட துணைத்தலைவர் எஸ்.ஜீவபாரதி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச்செயலாளர் சி.நாகப்பன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆலை நிர்வாகத்தையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.