விருத்தாசலத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விருத்தாசலத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வேணுகோபால், வெங்கட்ராமன், ராமலிங்கம், தரணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பெண்ணாடத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே அரசு பெற்று கொடுக்க வேண்டும். விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் வங்கிகளில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

வாடகை பணம்

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். கரும்பு ஏற்றி வந்த வாகனங்களுக்கு வாடகை பணத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

இதில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனிசாமி, மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், மாநில உதவி தலைவர் மாதவன், மாநில செயலாளர் ரவிச்சந்திரன், போராட்ட ஒருங்கிணைப்பாளர் அசோகன், ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்ட பொருளாளர் கலைச்செல்வன், மகாலிங்கம், வக்கீல் குமரகுரு, ஜெயபால், கொளஞ்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பால கிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.300 கோடி கடன் மோசடி

கடலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய பெண்ணாடம் தனியார் சர்க்கரை ஆலை, சித்தூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளை ஒட்டுமொத்தமாக மொட்டை அடித்து விட்டு, ஆலைகளை மூடி போட்டு விட்டு திவால் ஆகிவிட்டது என அறிவிக்கும் நிலைக்கு கொண்டு சென்று விட்டது. ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு ரூ.182 கோடி கொடுக்க வேண்டி உள்ளது. ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளின் பெயரில் ரூ.300 கோடி கடன்களை வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.300 கோடி மோசடி செய்துள்ளதாக ஆலை நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கைது நடவடிக்கை இல்லை. சொத்துகளை பறிமுதல் செய்யவில்லை. 300 கோடி ரூபாய் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு உள்ளார்கள். இந்த சர்க்கரை ஆலைகளை தனியாருக்கு விற்பனை செய்ய காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு விற்றால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய எந்த நிலுவை பணமும் கிடைக்காது. விவசாயிகள் தி.மு.க. அரசை நம்பி கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கையை அவர்கள் நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story