பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு: அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - எடப்பாடி பழனிசாமி


பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு:  அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி - எடப்பாடி பழனிசாமி
x

பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது என தமிழக அரசு எடுத்த முடிவு அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

பொங்கல் பரிசுத் தொகுப்பில் முழுக் கரும்பை வழங்கக் கோரி அதிமுக சார்பில் வரும் ஜனவரி 2ஆம் தேதி திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவித்த சில மணி நேரங்களில் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பும் சேர்த்து வழங்க வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்தநிலையில், பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்க கோரி தி.மலையில் வரும் ஜன.2ம் தேதி அதிமுக சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவது என தமிழக அரசு எடுத்த முடிவு அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கப்படுவது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகவுள்ள தகவலை அறிந்து தான் அதிமுக போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக திமுக பதிலடி கொடுத்து வருகிறது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு துண்டு கரும்பு வழங்குவதால் பட்ஜெட்டில் என்ன துண்டு விழப் போகிறதா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பி இருந்தார். இதனிடையே பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் கூட வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கரும்பை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வந்த நிலையில், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தது தமிழக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story