காதல் திருமணம் செய்தசேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் தற்கொலைபோலீசார் விசாரணை


காதல் திருமணம் செய்தசேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் தற்கொலைபோலீசார் விசாரணை
x
சேலம்

சேலம்

காதல் திருமணம் செய்த சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி பேராசிரியர்

சேலம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் பிரிவில் தற்காலிக உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் ஜெயபிரபாகரன் (வயது 34). இவருடைய மனைவி சோபனா (31). இவரும் அதே கல்லூரியில் சிவில் பிரிவில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர்கள் இருவரும் திருச்சியில் ஒரு கல்லூரியில் படித்தபோது காதல் ஏற்பட்டு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சோபனாவின் சொந்த ஊர் ஈரோடு. இவர்களுக்கு மகரன் (4), ரேவன் (2) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

தற்கொலை

ஜெயபிரபாகரன் தனது குடும்பத்தினருடன் கல்லூரியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது தந்தை மற்றும் பாட்டியும் உடன் வசித்து வந்துள்ளனர். ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சோபனா, குழந்தைகளுடன் சென்றிருந்தார். அப்போது ஜெயபிரபாகரன் செல்லவில்லை என தெரிகிறது.

நேற்று முன்தினம் இரவு ஜெயபிரபாகரன் வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, ஜெயபிரபாகரன், தனது மனைவியின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை

இதனை பார்த்து அவரது பெற்றோரும், அக்கம் பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து கருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோன்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட ஜெயபிரபாகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் சோபனா அதிக சம்பளம் வாங்கியதாகவும், அவரை விட ஜெயபிரபாகரன் குறைந்த சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அவர் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இருந்தாலும் ஜெயபிரபாகரனின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வேறு ஏதும் காரணம் இருக்க வாய்ப்புள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story