தர்மபுரி அருகேபள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி அருகே பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
பள்ளி மாணவன்
தர்மபுரி அருகே உள்ள ஏ.கொல்லஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். கட்டிட மேஸ்திரி. இவருடைய மகன் யாதவன் (வயது 13). இவன் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். விடுமுறை நாளில் சைக்கிளை எடுத்து கொண்டு வெளியிடங்களில் அதிக நேரம் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு அதிக நேரம் சைக்கிள் ஓட்ட வேண்டாம் என்று உறவினர் ஒருவர் அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் உள்ள ஒரு அறையில் யாதவன் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றான்.
சிகிச்சை பலனின்றி சாவு
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் யாதவனை மீட்டு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தான். அவனுடைய உடலை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் யாதவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதிக நேரம் சைக்கிள் ஓட்ட வேண்டாம் என்று அறிவுரை கூறியதால் மனமுடைந்து பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.