கணவர் குடிப்பழக்கத்தை கைவிடாததால்மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கணவர் குடிப்பழக்கத்தை கைவிடாததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே கணவர் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடாததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மது குடிக்கும் பழக்கம்
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த சீத்தா செட்டிக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். கூலித்தொழிலாளி. இவரது மனைவி சின்னபாப்பா (வயது 31). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். சதீஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் சதீஷ்குமார் வேலைக்கு செல்லும் பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் தினமும் மதுகுடித்து செலவு செய்துள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சின்னபாப்பா தனது கணவரிடம் மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று மாலை சதீஷ்குமார் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சின்னபாப்பா வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று சின்னபாப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் மது குடிக்கும் பழக்கத்தை கைவிடாததால் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.