பெண் தீக்குளித்து தற்கொலை
பரமத்திவேலூரல் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே கவுண்டம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ரகுபதி (வயது35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நதியா (32). இவர்களுக்கு நித்தீஷ் (12) என்ற ஒரு மகனும், நித்தியா (9) என் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் தற்போது ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் அருந்ததியர் தெருவில் 10 ஆண்டுகளாக வசித்து வந்தனர். ரகுபதிக்கும், நதியாவிற்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகின்றன. இந்தநிலையில் நதியா, கணவரிடம் தீபாவளி பண்டிகைக்காக தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என பலமுறை கேட்டு வந்துள்ளார். அதற்கு நதியாவின் கணவர் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். இதனால் நதியா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இதையடுத்து கடந்த மாதம் 19-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தீ உடல் முழுவதும் பரவியதில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி நதியா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.