திண்டுக்கல் அருகே நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
திண்டுக்கல் அருகே நிதி நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திண்டுக்கல் அருகே உள்ள அகரம் கருங்கல்பட்டியை சேர்ந்தவர் ஜார்ஜ் அலெக்சாண்டர். இவர், தாடிக்கொம்புவில் டீக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மகன் மில்டன் ஜார்ஜ் (வயது 21). இவர், வடமதுரையில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம்போல் மில்டன் ஜார்ஜ் சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு தூங்க சென்றார். ஆனால் இன்று காலை வெகுநேரமாகியும் அறையை விட்டு அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் கதவை திறந்து பார்த்தனர். அப்போது மில்டன் ஜார்ஜ் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மில்டன் ஜார்ஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மில்டன் ஜார்ஜ் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.