வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை கணவர் உள்பட 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை கணவர் உள்பட 4 பேருக்கு போலீசார் வலைவீச்சு
எலச்சிபாளையம்:
திருச்செங்கோட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவருடைய கணவர், மாமியார் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வரதட்சணை கொடுமை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சி.எச்.பி. காலனி பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன். லாரி டிரைவர். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் வசுமதி (வயது 23). என்ஜினீயரான இவருக்கும் நாமக்கல் நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக்கல் என்ஜினீயரான வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி திருமணம் நடந்தது.
இந்த நிலையில் வசுமதி தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும் தனது தந்தை அத்தியப்பனிடம் கூறினாராம். இதையடுத்து அவர் மகளை திருச்செங்கோட்டுக்கு அழைத்து வந்தார். அன்றில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட வசுமதி கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.
உதவி கலெக்டர் விசாரணை
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வசுமதி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வசுமதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அத்தியப்பன் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். மேலும் வசுமதியின் கணவர் வினோத், அவருடைய தந்தை சுப்பிரமணி, தாயார் அமுதா, தங்கை காவியா ஆகிய 4 பேர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கணவர் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். திருமணமான 1 மாதத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.






