மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை
பாண்டமங்கலம் அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்
கூலித்தொழிலாளி
பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள நெட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 55) கூலித்தொழிலாளி. இவரது மனைவி பானுமதி. இவர்களுக்கு நிவேதா (22) என்ற ஒரே மகள் இருந்தார். இவர் எம்.எஸ்சி. படித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் நிவேதாவும் அதே பகுதியில் உள்ள ஒரு வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்த சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை சேர்ந்த யுவராஜ் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் மகுடஞ்சாவடியில் குடும்பம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மகள் நிவேதாவை தனது கணவருடன் ஊருக்கு வருமாறு வீரப்பன் அழைத்துள்ளார். ஆனால் நிவேதா வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த வீரப்பன் மகளை அழைத்து வர மகுடஞ்சாவடிக்கு தனது மனைவியை நேற்று அனுப்பி வைத்துள்ளார்.
தற்கொலை
ஆனால் மகள் நிவேதா அங்கு வர மறுத்து விட்டதாக கூறினார். இதையடுத்து தான் ஊருக்கு திரும்பி வருவதாக பானுமதி கணவரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்தபோது தனது கணவர் வீட்டில் உள்ள விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிகொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீரப்பனின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து வேலூர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாண்டமங்கலம் அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.