கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
நாமகிரிப்பேட்டை அருகே கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ராசிபுரம்
கூலி வேலை
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). இவரது மனைவி பாப்பா (60). இவர்களுக்கு லதா (35) மற்றும் சுமதி (32) என்ற 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் குடல் இறக்கத்திற்கு ஆபரேஷன் செய்துக் கொண்டார்.
தற்போது அவர் தனியார் நிறுவனத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 4 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். வயதான நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டதாலும், போதிய வருமானம் இல்லாததாலும் விரக்தியில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி பாப்பா இருவரும் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து விட்டு மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது.
பரிதாப சாவு
இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர்அவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் கணவன்-மனைவி இருவரையும் டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தபோது ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.