போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ்காரர்
நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டி சேர்மன் வீதியை சேர்ந்த சங்கர் மகன் இளையராஜா (வயது 37). இவருக்கு பிரியதர்ஷினி (28) என்ற மனைவியும், சுசிவர்சன் (4) என்ற மகனும் உள்ளனர். இளையராஜா திருச்செங்கோடு நகர போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். மேலும் ஆயுதப்படையிலும் பணியாற்றி வந்தார்.
இதனிடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4 மாதங்களாக இளையராஜா பணிக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை இளையராஜா தனது வீட்டில் உள்ள விட்டத்தில் சால்வையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடல் தகனம்
இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இளையராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மாலையில் நாமக்கல்லில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் அங்கு 12 குண்டுகள் முழங்க இளையராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.