காதல் தோல்வியால்வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


மணியனூரில் காதல் தோல்வியால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்

கந்தம்பாளையம்

தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள கே.கே.வலசு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் வீரமணி (வயது26). கூலித்தொழிலாளி. இவர் நேற்று கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூர் ஒத்தரசு பிரிவு சாலையில் உள்ள மணி என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் 2-ம் தளத்தில் படிக்கட்டு அருகில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வீட்டின் உரிமையாளர் மணி நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் காதல் தோல்வியால் வீரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

சாலைமறியல்

வீரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தததால், இங்கு அவரது உறவினர்கள் ஏராளமானோர் கூடினர். அவர்கள் வீரமணியை காதல் விவகாரத்தில் தாக்கிய நபர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை வீரமணியின் உடலை வாங்க மாட்டோம் என கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திடீரென இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் நேற்று மாலை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நேற்று முன்தினம் வீரமணி நல்லூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றதாகவும், அங்கு கையை கத்தியால் கிழித்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு வந்த பொதுமக்கள் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாகவும், அதில் இருந்து வீரமணி கண்ணாடியை உடைத்து தப்பி சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story