கோபியில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை; சிலரின் பெயர்களை சுவற்றில் ரத்தத்தால் எழுதி வைத்துள்ளதால் பரபரப்பு
கோபியில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். வீட்டின் சுவற்றில் சிலரின் பெயர்களை ரத்தத்தால் எழுதி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடத்தூர்
கோபியில் கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். வீட்டின் சுவற்றில் சிலரின் பெயர்களை ரத்தத்தால் எழுதி வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
துர்நாற்றம்
கோபி சிவசண்முகம் வீதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 65). இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி பழனாள் (52). இவர்களுடைய மகன் ராஜன். இவர் ஈரோடு பஸ் நிலையத்தில் வேர்க்கடலை விற்று வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தகராறில் அவர் கொல்லப்பட்டார். இதனால் கணவன், மனைவி மட்டும் வசித்து வந்தனர்.
கடந்த 15-ந் தேதியில் இருந்து காளியப்பனும், பழனாளும் வீட்டை விட்டு ெவளியே வரவில்லை. இந்தநிலையில் காளியப்பன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தூக்கில் தொங்கினார்
இதையடுத்து காளியப்பனின் வீட்டுக்கு சென்ற போலீசார் முன்பக்க கதவை திறந்து மாடியில் உள்ள அறைக்குள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது காளியப்பன் தூக்கில் பிணமாக தொங்குவதும், தரையில் பழனாள் பிணமாக கிடப்பதும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் கதவை உடைத்து சென்று பார்த்தபோது பழனாளும் தூக்குப்போட்டுதான் தற்கொலை செய்துள்ளார். ஆனால் அவரின் எடை தாங்காமல் கயிறு அறுந்து தரையில் விழுந்தது தெரியவந்தது.
கணவன், மனைவி இருவரின் உடல்களும் அழுகிய நிலையில் இருந்தன. ஈரோட்டில் இருந்து தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தார்கள்.
ரத்தத்தில் எழுதப்பட்ட பெயர்கள்
இதையடுத்து போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள். தற்கொலை செய்துகொள்ளும் முன்பு காளியப்பன் ரத்தத்தால் சுவற்றில் சிலரின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து, காளியப்பனும், பழனாளும் ஏன் தற்கொலை செய்துகொண்டார்கள்?, எதற்காக ரத்தத்தில் சிலரின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்? என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.