கந்தம்பாளையம் அருகே கிராம நிர்வாக பெண் அலுவலர் தற்கொலை-உதவி கலெக்டர் விசாரணை

கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே கிராம நிர்வாக பெண் அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா விசாரணை நடத்தி வருகிறார்.
பெண் அலுவலர்
நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள குன்னமலை சிக்கிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 35). இவர் நாமக்கல் தொட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் மொடக்குறிச்சி கணபதிபாளையத்தை சேர்ந்த நடராஜன் என்பவரது மகள் நவீனாவுக்கும் (32), கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளான்.
நவீனா திருச்செங்கோடு தாலுகா பிரிதி கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நவீனா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
தற்கொலை
நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது, நவீனா தனது புடவையால் தூக்குப்போட்டு கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது நவீனா ஏற்கனவே இறந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நவீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
உதவி கலெக்டர் விசாரணை
இந்தநிலையில் நவீனா தந்தை நடராஜன் நல்லூர் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகள் இறப்புக்கு காரணமான பொன்னுசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திருமணமாகி 6 ஆண்டுகளே ஆவதால் நவீனா தற்கொலை குறித்து திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா விசாரணை நடத்தி வருகிறார். குடும்ப பிரச்சினையில் கிராம நிர்வாக பெண் அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






