நாமக்கல்லில் பெண் தற்கொலை முயற்சி


நாமக்கல்லில் பெண் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 28 March 2023 12:15 AM IST (Updated: 28 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல்:

மாமியார் அடித்து துன்புறுத்துவதாக கூறி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்கொலைக்கு முயற்சி

நாமக்கல் அருகே உள்ள நரவலூரை சேர்ந்தவர் அமலா (வயது 25). இவர் நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு குளிர்பான பாட்டிலில், விஷத்தை கலக்கி குடித்து தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அமலாவிடம் இருந்து, பாட்டிலை பறித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறியதாவது:-

எனது முதல் கணவர் நோயால் பாதிக்கப்பட்டதால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டோம். இதையடுத்து, ராஜேஷ் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டேன். தற்போது நான் 3 மாத கர்ப்பமாக இருக்கிறேன். வயிற்றில் உள்ள குழந்தை ராஜேஸ் உடையது இல்லை. அதனால், அதை கலைத்துவிடும்படி எனது மாமியார் துன்புறுத்தி வருகின்றார். வேறு சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்ததால், எனது பெற்றோர் மற்றும் உறவினர்களும் என்னை ஒதுக்கி வைத்து விட்டனர்.

பரபரப்பு

அதனால் சாப்பாட்டுக்கு மிகவும் கஷ்டப்படுகிறேன். இது குறித்து நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் முன்பு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story