பரமத்தி அருகே மனைவி பிரிந்த ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை
பரமத்திவேலூர்:
பரமத்தி அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொழிலாளி
நாமக்கல் அருகே உள்ள நல்லிபாளையத்தை அடுத்த கருப்பட்டிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வெங்கடாசலத்தை பிரிந்து மனைவி சென்றார். இதனால் வெங்கடாசலம் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர் பல்வேறு ஊர்களில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தங்கி, கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வெங்கடாசலம், எஸ்.வாழவந்தி அருகே கே.புதுப்பாளையத்தில் உள்ள உறவினர் அங்கம்மாள் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் இல்லாததால் வெங்கடாசலம் மட்டும் தனியாக இருந்தார்.
தற்கொலை
அப்போது மனைவி பிரிந்த ஏக்கத்தில் இருந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். அப்போது அங்கு வந்த அங்கம்மாள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வெங்கடாசலத்தை மீட்டு, சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த தற்கொலை குறித்து தகவல் அறிந்த பரமத்தி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வெங்கடாசலம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.