மோகனூர் அருகே பேரூராட்சி தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை


மோகனூர் அருகே பேரூராட்சி தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 April 2023 12:15 AM IST (Updated: 16 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே பேரூராட்சி தூய்மை பணியாளர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூய்மை பணியாளர்

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அண்ணாநகரை சேர்ந்தவர் சிவா (வயது 40). இவர் காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி அன்னக்கிளி (37). இந்த தம்பதிக்கு குமரேசன், தினேஷ் என்ற மகன்களும், மோனிஷா என்ற மகளும் உள்ளனர்.

சிவாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் கடந்த 10-ந் தேதி இரவு சிவா மது குடித்து விட்டு வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதனை மனைவி அன்னக்கிளி தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அழுகிய நிலையில் பிணம்

இதையடுத்து சிவா, மனைவி அன்னக்கிளியிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை அன்னக்கிளி மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்காததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள சம்பா மேடு சங்கிலி கருப்பு கோவில் அருகில் காவிரி ஆற்றங்கரையோரம் பூவரசு மரத்தில் தூக்கில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்கியது. இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து மோகனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

தற்கொலை

மோகனூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் தூக்கில் பிணமாக தொங்கியவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியவர் காட்டுப்புத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர் சிவா என்பதும், கடந்த 10-ந் தேதி இரவு வீட்டை விட்டு வெளியேறிய அவர், மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

1 More update

Next Story