ராசிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி


ராசிபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மூதாட்டி தீக்குளிக்க முயன்றார்.

நிலம்

ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 41). இவரது மனைவி சுகந்தி (38). இவர்களுக்கு ஆனந்தீஸ்வரன் (17) என்ற மகனும், அபிநயா ஸ்ரீ (9) என்ற மகளும் உள்ளனர். ஆனந்தீஸ்வரன், அபிநயா ஸ்ரீ ஆகிய இருவரும் சேலத்தில் உள்ள அவர்களது பாட்டி அனுசுயா வீட்டில் தங்கி படித்து வருகின்றனர்.

ஆனந்தீஸ்வரனின் தாத்தா பெரியசாமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தை பேரன் ஆனந்தீஸ்வரன் பெயரில் எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அதற்கு ராஜ்குமாரை காப்பாளராக நியமித்ததாக தெரிகிறது.

தீக்குளிக்க முயற்சி

இதனிடையே அந்த நிலம் வேறு நபருக்கு தவறுதலாக கிரயம் செய்யப்பட்டதாகவும், அதனை ரத்து செய்து தரக்கோரியும், அனுசுயா பல மாதங்களாக புகார் அளித்து வந்தார்.

இந்தநிலையில் நேற்று அனுசுயா, ஆனந்தீஸ்வரன், அபிநயா ஸ்ரீ ஆகியோருடன் ராசிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த ராசிபுரம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மேலும் அனுசுயாவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story