பெண் தூக்குப்போட்டு தற்கொலை
வேலகவுண்டம்பட்டி அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்
உடல்நிலை பாதிப்பு
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம், பொம்மம்பட்டியைச் சேர்ந்தவர் துரைசாமி. தனியார் நூற்பாளையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (வயது 38). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்றும் உடல்நிலை சீராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று கார்த்திகா வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் செல்வி அறையில் சென்று பார்த்தபோது உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்துள்ளது. பின்னர் கதவை பலமுறை தட்டியும் திறக்காததால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
தற்கொலை
அப்போது கார்த்திகா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கார்த்திகா உயிரிழந்தார்.
தகவல் அறிந்து அங்கு வந்த வேலகவுண்டம்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.