தர்மபுரியில் குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
தர்மபுரி:
தர்மபுரியில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கணவரை பிரிந்த பெண்
தர்மபுரி ராமச்சந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 27). இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக அவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் இவருக்கு, குண்டல்பட்டியை சேர்ந்த சென்னப்பன் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் இவர்கள் 2 பேரும் கணவன்- மனைவியாக சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் விஜயலட்சுமி தனியார் குழு மூலம் கடனாக பணம் பெற்றார். அந்த பணத்தை சென்னப்பன் தேவையில்லாமல் செலவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும் தெரிகிறது.
தூக்குபோட்டு தற்கொலை
இதனால் விஜயலட்சுமி, சென்னப்பன் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த விஜயலட்சுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விஜயலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தற்கொலை தொடர்பாக தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.