எஸ்.வாழவந்தி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை


எஸ்.வாழவந்தி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

மோகனூர்:

எஸ்.வாழவந்தி அருகே கணவர் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் இறந்த துக்கம்

மோகனூரை அடுத்த எஸ்.வாழவந்தி அருகே உள்ள பெரமாண்டபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மனைவி ராதா (வயது 55). இந்த தம்பதிக்கு தாரணி என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணமாகி ஓசூர் அரசம்பட்டியில் கணவருடன் வசித்து வருகிறார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராதாவின் கணவர் சண்முகம் திடீரென இறந்து விட்டார். கணவர் இறந்த துக்கத்தில் ராதா மனவேதனையுடன் இருந்து வந்தார். இதனால் தாரணி, தனது தாய் ராதாவை ஓசூருக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

தீக்குளிப்பு

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.வாழவந்தியில் நடந்த மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு ராதா, தாரணி ஆகியோர் வந்தனர். கோவில் திருவிழா முடிவடைந்த நிலையில், ராதாவை ஊரில் விட்டு விட்டு, தாரணி ஓசூருக்கு சென்றார். தனிமையில் இருந்த ராதா, கணவர் இறந்த துக்கத்தால் தவித்து வந்தார்.

இதனால் நேற்று முன்தினம் மதியம் அவர், வீட்டில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். வலியால் அலறி துடித்த அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி சென்றனர். அவர்கள் தீயை அணைத்து, ராதாவை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதும் ராதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ராதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கணவர் இறந்த துக்கத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story