விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
இண்டூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பாரப்பட்டி
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள மல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவரது குடும்பத்தினர் மல்லாபுரத்தில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 50 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதேபோல் அந்த கிராமத்தில் வசிக்கும் 13 குடும்பத்தினர் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு பட்டா கொடுப்பதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பெருமாள் வீட்டுக்கு பட்டா கொடுக்கக்கூடாது என்று நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில் ஒருவர் மனு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பெருமாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் இண்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.