தர்மபுரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை


தர்மபுரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை: உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 30 Jun 2023 12:30 AM IST (Updated: 30 Jun 2023 1:32 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி அருகே குடும்ப பிரச்சினையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

குடும்ப பிரச்சினை

தர்மபுரி ஆட்டுக்காரன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். விவசாயி. இவருடைய இளைய மகள் சந்தியா (வயது 20). தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியாவின் அக்காளின் உறவினரான கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கும் திருமணம் செய்ய 2 குடும்பத்தினரும் முடிவெடுத்தனர்.

இந்த நிலையில் சந்தியாவின் அக்காள் வேறு ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பு குடும்பத்தினர் கலந்து பேசி சந்தியாவிற்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் கணவன்- மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தியா கணவர் வீட்டில் இருந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.

தற்கொலை

இந்த நிலையில் சந்தியாவை பெற்றோர் சமாதானப்படுத்தி கணவர் வீட்டிற்கு சென்று குடும்பம் நடத்துமாறு கூறினார்கள். அதற்கு சந்தியாவும் ஒப்பு கொண்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியாவின் குடும்பத்தினர் வீட்டிலிருந்து வெளியே சென்று இருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த சந்தியா தூக்குப்போட்டு கொண்டார். இந்த நிலையில் வீட்டுக்கு வந்த குடும்பத்தினர் சந்தியா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி சில ஆண்டுகளே ஆவதால் சந்தியாவின் தற்கொலை குறித்து தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story