குளிர்பானத்தில் கலந்து கொடுத்தார்:3 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை முயற்சிசேலம் அருகே பரபரப்பு
அயோத்தியாப்பட்டணம்
சேலம் அருகே 3 மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டிட தொழிலாளி
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மின்னாம்பள்ளி செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் டெல்லி பாபு (வயது 30), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நித்யா (25). இவர்களுக்கு சசி பிரியா (9), அஸ்விதா ஸ்ரீ (8), மோகனா நெவி (6) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.
டெல்லி பாபு தினமும் குடித்துவிட்டு, குடிபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார். வேலைக்கு சென்றாலும் செலவுக்கு வீட்டிற்கு பணம் கொடுப்பதில்லை. இதனால் குடும்பம் நடத்த முடியாமல் நித்யா திணறி வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது, நீங்கள் எதையும் கேட்பது கிடையாது, எனக்கு ஏதாவது ஆகிவிட்டால் குழந்தைகள் என்ன செய்வார்கள் என கணவரிடம் நித்யா கேட்டுள்ளார்.
தற்கொலை முடிவு
இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் டெல்லி பாபு மதுபோதையில் தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் கணவரின் செயல்பாடுகளால் மன வேதனை அடைந்த நித்யா, தனது 3 மகள்களுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார்.
இதையடுத்து வீட்டின் அருகே உள்ள அரளிச்செடிகளில் இருந்து விதைகளை பறித்து வந்து அதனை அரைத்து குளிர்பானத்தில் கலந்து 3 மகள்களுக்கும் கொடுத்துள்ளார். பின்னர் நித்யாவும் விஷம் கலந்த குளிர்பானத்தை குடித்துள்ளார். தொடர்ந்து தனது பெற்றோரை தொடர்பு கொண்டு அரளி விதையை அரைத்து குடித்து விட்டதாக நித்யா தெரிவித்துள்ளார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதனால் அவர்கள் ஓடி வந்து வீட்டில் மயங்கி கிடந்த நித்யா மற்றும் அவரின் 3 மகள்களை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்தனர். நித்யாவை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 3 மகள்களும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
3 மகள்களுக்கு விஷம் கொடுத்து விட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அயோத்தியாப்பட்டணம் அருேக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.