பாலக்கோடு துணை மின்நிலைய அலுவலகத்தில்தூக்க மாத்திரை தின்று பெண் ஊழியர் தற்கொலை முயற்சி
பாலக்கோடு:
பாலக்கோடு அவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் போர்ஷியா (வயது 45). இவர் பாலக்கோடு அருகே வெள்ளிசந்தை துணை மின்நிலையத்தில் கணக்கு உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் போர்ஷியாவுக்கு துணை மின் நிலைய அலுவலகத்தில் சில அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதுதொடர்பாக அவர் செயற்பொறியாளருக்கு கடிதம் கொடுத்தும் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் விரக்தியடைந்த போர்ஷியா நேற்று துணை மின்நிலைய அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முன்பு தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதை அறிந்து அலுவலகத்துக்கு சென்ற குடும்பத்தினர் மயக்கம் அடைந்த போர்ஷியாவை மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.