நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நாமக்கல்:
பட்டா நிலத்தை கிராம கணக்கில் பதிவு செய்யக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வயதான தம்பதி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை முயற்சி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மங்களபுரம் தாண்டாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 73). இவர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனைவி சகுந்தலாவுடன் (65) மனு கொடுக்க வந்தார்.
அப்போது, திடீரென அவர்கள் பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை பறித்து, அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், கலெக்டரிடம் அழைத்து சென்று மனு அளிக்க செய்தனர்.
கிராம கணக்கில் பதிவு
அந்த மனுவில் தங்கவேல் கூறியிருப்பதாவது:-
எனது பட்டா நிலத்தை கிராம கணக்கு மற்றும் வட்ட கணக்கில் பதிவு செய்து தரக்கோரி, மனு அளித்துள்ளேன். அதன்படி கலெக்டர், சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு கடிதம் வழங்கி உள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நான் கோரிய ஆவணங்களை கிராம கணக்கில் பதிவு செய்து, அ.பதிவேடு நகல் மற்றும் 'எப்.எம்.பி.' நகலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
வயதான தம்பதி தீக்குளிக்க முயன்ற சம்பவம் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.