வங்கி மேலாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
ஒட்டன்சத்திரத்தில் வங்கி மேலாளர் தனது மனைவி, மகனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது மனைவி பரிதாபமாக இறந்தார்.
விஷம் குடித்தனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (வயது 59). இவர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முத்துராமலிங்கம் விருப்ப ஓய்வு பெற்றார். இருப்பினும் அவர் தனது குடும்பத்துடன் ஒட்டன்சத்திரம் ஆத்தூர் பகுதியில் மனைவி உமா கோமதி, மகன் சிவபிரபாகரன் ஆகியோருடன் வசித்து வந்தார். மகன் சிவபிரபாகரன் என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார்.
இந்தநிலையில் முத்துராமலிங்கம் மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் விஷத்தை குடித்தனர். இதில் 3 பேரும் மயங்கினர். அதேபோல் தாங்கள் வளர்த்து வந்த 2 நாய்களுக்கும் சாப்பாட்டில் விஷத்தை கலந்து வைத்தனர். சிறிது நேரத்தில் ஒருநாய் இறந்துவிட்டது. மற்றொரு நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருந்தது.
பெண் சாவு
இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் முத்துராமலிங்கத்தின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது 3 பேரும் விஷம் குடித்து மயங்கி கிடந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மயங்கி கிடந்த முத்துராமலிங்கம் மற்றும் அவரது மனைவி, மகனை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, உமாகோமதி ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது.
உயிருக்கு போராடிய முத்துராமலிங்கம், சிவபிரபாகரன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடன் பிரச்சினை காரணமாக முத்துராமலிங்கம் தனது மனைவி, மகனுடன் விஷம் குடித்தது தெரியவந்துள்ளது.