பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்


பட்டறை அமைத்து சின்ன வெங்காயத்தை இருப்பு வைக்கும் விவசாயிகள்
x
திருப்பூர்


விலை உயரும் என்ற நம்பிக்கையில் பல்லடம் பகுதியில் சின்ன வெங்காயத்தை விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர்.

சின்னவெங்காயம்

பல்லடம் பகுதியில் வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் ஆடி மாதத்தில் இருந்து அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை தொடங்கியபோது கிலோ ரூ.150-க்கு விலை போனது. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை உடனுக்குடன் விற்பனை செய்தார்கள்.

பின்னர் படிப்படியாக விலை குறைந்து ரூ.70-க்கு விற்பனையானது.. ஏற்றுமதி அதிகரிப்பால் வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்தது. இதனால் வெங்காயம் இருப்பு வைக்க விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இனி வரும் பண்டிகை காலங்களில் அறுவடை முடிந்து விடும். அப்போது சின்ன வெங்காயத்தின் விலை உயரும் என்பதால் மத்திய அரசு வெங்காயத்திற்கு 40 சதவீதம் வரி விதித்தது. இதைத் தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை சரிவடைந்தது. கிலோ ரூ.40-க்கும் கீழே விலை போனது.

பட்டறை அமைத்து இருப்பு வைப்பு

இதனால் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பட்டறை அமைத்து இருப்பு வைத்து வருகின்றனர். இதனால் சந்தைக்கு வரும் சின்ன வெங்காயம் வரத்து குறைந்து விற்பனை விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.70 வரை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:- மைசூரு சின்ன வெங்காயம் வரத்து இன்னும் சில வாரங்களில் நின்று விடும். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தால் வெங்காயம் அழுகல் அதிகரிக்கும். இதனால் உள்ளூர் சின்ன வெங்காய வரத்து குறையும். அப்போது விவசாயிகள் இருப்பு வைத்துள்ள சின்ன வெங்காயம் மட்டுமே சந்தைக்கு வரும். வரும் பண்டிகை காலத்தில் கிலோ ரூ. 100-க்குவிலை போகும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை இருப்பு வைத்திருக்கிறார்கள்.

மழை குறைந்தால் விளைச்சல் அதிகரிக்கும். விலை பெரியளவில் உயராது. ஆனால் மழை தீவிரமடைந்தால் அழுகல் ஏற்பட்டு சின்ன வெங்காய விலை உயர்ந்துவிடும். சின்ன வெங்காய விலையை பருவ மழையே தீர்மானிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்


Next Story