உச்சம் தொட்ட சின்ன வெங்காயம் விலை
காங்கயம் வாரச் சந்தையில் தக்காளியை தொடர்ந்து சின்ன வெங்காயம் விலை உச்சம் தொட்டது. ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வாரச்சந்தை
காங்கயம் பஸ் நிலையம் அருகே வாரச்சந்தை வளாகம் உள்ளது. இந்த சந்தை வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும். இந்த சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், கீரைகள், வீட்டு உபயோக பொருட்கள் முதற்கொண்டு அணைத்து பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சந்தைக்கு காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான நகர, கிராம மக்கள் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வார்கள்.
இதன் காரணமாகவே வாரந்தோறும் திங்கட்கிழமை இந்த சந்தை நாளில் இந்த பகுதியில் உள்ள விவசாய தொழிலாளர்கள், தேங்காய் களம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு வார சம்பளத்துடன் விடுமுறை விடப்படுகிறது. இதனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் நகர பகுதி மக்கள் இந்த சந்தைக்கு வந்து செல்வார்கள்.
தக்காளி
அதன்படி நேற்று கூடிய வார சந்தையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.180-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தக்காளி கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை இல்லாத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் வரும் நாட்களில் சின்ன வெங்காயம், தக்காளியின் விலை இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.