கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு தலைவராக சுமித்ரா தேவி ஒருமனதாக தேர்வு

கிருஷ்ணராயபுரம் ஒன்றியக்குழு தலைவராக சுமித்ரா தேவி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
கிருஷ்ணராயபுரம்,
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் மொத்தம் 20 உறுப்பினர்களை கொண்டது. கடந்த 2020-ம்ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 12 உறுப்பினர்களும், தி.மு.க. கூட்டணியில் 8 உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர். அ.தி.மு.க.வில் அதிக உறுப்பினர்கள் இருந்த போதும் தலைவர் தேர்ந்தெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு காரணம் தலைவர் பதவிக்கு பட்டியல் இன பெண் உறுப்பினர் தேர்வு செய்ய வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வில் பட்டியில் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர்கூட வெற்றி பெறவில்லை. ஆனால் தி.மு.க.வில் பட்டியல் இனத்தை சேர்ந்த 5 உறுப்பினர்கள் இருந்தனர். இதனால் தி.மு.க.வில் வெற்றி பெற்ற சந்திரமதியை அ.தி.மு.க.வினர் தங்கள் கட்சிக்கு இழுத்து அவரை ஒன்றிய தலைவராக்கினர். இதனை அடுத்து தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்ததும், அ.தி.மு.க.வில் இருந்து ஒரே நேரத்தில் 6 உறுப்பினர்களும், அடுத்து அடுத்து தி.மு.க.வில் இணைந்தனர். இதனால் தி.மு.க.வின் பலம் கூடியது. ஒன்றிய தலைவர் சந்திரமதி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதனால் ஒன்றிய தலைவர் பதவியிலிருந்து சந்திரமதி நீக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து புதிய ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நேற்று நடந்தது. மறைமுக தேர்தலை உதவி திட்ட அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான தமிழரசி நடத்தினார். இக்கூட்டத்தில் 19 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய தலைவர் பதவிக்கு 2 வார்டு தி.மு.க. உறுப்பினர் சுமித்ராதேவி வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் ஒன்றிய தலைவராக சுமித்ரா தேவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.






