கோடை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்


கோடை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 16 May 2023 6:00 AM IST (Updated: 16 May 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் கோடை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் கோடை விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சுற்றுலா பயணிகள்

மலைப்பிரதேசமான வால்பாறையில் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வருவதால், குளிர்ந்த காலநிலை நிலவும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. கோடை விடுமுறையை கழிக்க கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகிறார்கள்.

2 ஆண்டுகளுக்கு பிறகு சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சிக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளித்து உள்ளனர். அங்கு ஆற்றின் குறுக்கே உள்ள தூரிப்பாலத்தில் நடந்து சென்று குதித்து மகிழ்ந்தனர். கூழாங்கல் ஆற்றில் குளித்து உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் வால்பாறையில் ஆங்காங்கே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.

கோடை விழா

வால்பாறையில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். ஆனால், தேர்தல், கொரோனா பாதிப்பால் கடந்த 5 ஆண்டுகளாக கோடை விழா நடத்தப்பட வில்லை. நடப்பாண்டில் கோடை விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோடை விடுமுறை இன்னும் 2 வாரத்தில் நிறைவடைய உள்ளது.

இந்தநிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில், கோடை விழா வருகிற 26, 27, 28-ந் தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி, உணவு மேளா, தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி கண்காட்சி, எஸ்டேட் பகுதிகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story