கோவையை குளிர வைத்த கோடை மழை
கோவையை குளிர வைத்த கோடை மழை
கோவை
கோவையில் கோடை மழை பெய்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெப்பத்தின் தாக்கம் அதிகம்
குளு, குளு கோவையில் இந்த ஆண்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. மார்ச் மாதத்தில் இருந்தே வெப்பம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். மேலும் இந்த மாதத்தில் வெயிலின் அளவு 101 டிகிரியை தாண்டியது.
இதனால் இந்த வெப்பத்தில் இருந்து காக்க மழை வராதா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் நேற்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையமும் அறிவித்து இருந்தது.
இடி-மின்னலுடன் மழை
இருந்தபோதிலும் கோவையில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாகதான் இருந்தது. மாலை 5 மணியளவில் லேசான மழை தூறியது. இந்த நிலையில் மாலை 5.15 மணியில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.
வடவள்ளி, சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், கவுண்டம்பாளையம், வெள்ளக்கிணறு உள்பட பல்வேறு இடங்களிலும் காற்றுடனும், இடி-மின்னலுடனும் பலத்த மழை பெய்தது. சில பகுதிகளில் காற்றுடன் லேசான மழையும் பெய்தது. கோவை அம்மன் குளத்தில் மின்னல் தாக்கி தென்னை மரத்தில் தீ பிடித்தது. இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு சென்று தீ மற்ற இடங்களுக்கு பரவவிடாமல் தீயை அணைத்தனர்.
பொதுமக்கள் மகிழ்ச்சி
இந்த மழை காரணமாக கோவையில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, கோவையில் கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் மழை பெய்தால் குளிர்ந்து விடும். தற்போது மழை பெய்து உள்ளதால், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்காது என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.