புதுக்கோட்டையை குளிர்வித்த கோடை மழை


புதுக்கோட்டையை குளிர்வித்த கோடை மழை
x

புதுக்கோட்டையை கோடை மழை குளிர்வித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை

அக்னி நட்சத்திரம்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. புதுக்கோட்டையிலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக காணப்படுகிறது. கடந்த 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய போது பரவலாக மழை பெய்தது. அதன்பின் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தினமும் சராசரியாக 100 டிகிரி வெயில் அளவு பதிவாகியிருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் அதிகமாக இருந்தது. மாலை 5.30 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு சூழ்ந்தன. தொடர்ந்து இரவு 7 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் ஒரே சீராக பெய்தது. திடீர் மழையை எதிர்பாராத பொதுமக்கள் பலர் சாலையில் நனைந்தபடி சென்றனர். ஒரு சிலர் மழையில் நனையாமல் இருக்க குடையை பிடித்தப்படி சென்றதை காணமுடிந்தது.

விராலிமலை ஒன்றியம், அன்னவாசல்

விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர். பேராம்பூர், ஆவூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 5.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. அந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. ஆலங்குளம், மதயானைப்பட்டி, மலம்பட்டி, நீர்பழனி, கத்தலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேபோல் இந்த மழை விவசாயிகளுக்கு மானாவாரி கோடை உழவு பணியை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என்றனர். அதே நேரத்தில் தற்பொழுது குறுவை நெல் சாகுபடி அறுவடை தொடங்கியுள்ள நேரத்தில் தற்பொழுது பெய்த மழையால் அறுவடை பாதிக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

அன்னவாசல், இலுப்பூர், சித்தன்னவாசல், முக்கண்ணாமலைப்பட்டி, வயலோகம், குடுமியான்மலை, பெருமநாடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இடியுடன் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 2 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் நீர்நிலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மணமேல்குடி, திருவரங்குளம்

மணமேல்குடி, வடக்கு அம்மாபட்டினம், பொன்னகரம் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகளில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. பயங்கர காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கொளுத்தும் வெயிலால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இரவில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சற்று தாமதமாக சென்றனர்.

திருவரங்குளம் வட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு பிறகு கோடை மழை சுமார் ½ மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

கீரனூர், ஆதனக்கோட்டை

கீரனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறாவளி காற்று கடுமையாக வீசியது. இதனால் சாலையோரங்களில் இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன பலத்த காற்றால் வீட்டின் மேற்கூரைகள், விளம்பர பதாகைகள் காற்றில் பறந்தது. சுமார் 1 மணிநேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலை ஏற்பட்டது.

ஆதனக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளான கருப்புடையான்பட்டி, பெருங்களூர், மாந்தாங்குடி, அரியூர், பொக்கிசக்காரன்பட்டி, ஆதனக்கோட்டை, மங்களத்துப்பட்டி, மனவாத்திப்பட்டி மட்டையன்பட்டி கூத்தாச்சிப்பட்டி, குப்பையன்பட்டி, சொக்கநாதப்பட்டி, சோத்துப்பாளை, வளவம்பட்டி, கல்லுக்காரன்பட்டி புதூர், கணபதிபுரம், தொண்டைமான் ஊரணி, நரங்கியன்பட்டி, உரியன்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இடியுடன் கன மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் பல்வேறு கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

ஆலங்குடி

ஆலங்குடி, மாங்கோட்டை, செம்பட்டிவிடுதி, களபம், இச்சடி அரசடிபட்டி, தெட்சிணாபுரம், வேங்கிடகுளம், எஸ்.குளவாய்ப்பட்டி, அரையப்பட்டி, பள்ளத்திவிடுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

வெப்ப தாக்கம் குறைந்தது

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று இரவு பெய்த மழை பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளித்தது. மேலும் வெப்ப தாக்கத்தை குறைத்து குளிர்வித்தது. இதனால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் மாவட்டத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. அக்னிநட்சத்திரம் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. அதன்பின் வெயிலின் தாக்கம் குறையுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது வெயிலின் தாக்கம் குறையாத காரணத்தால் பள்ளிகள் திறப்பு தேதி 7-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story