கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில் கோடை மழை
கிணத்துக்கடவு, நெகமம் பகுதியில் கோடை மழை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில் இரவு நேரங்களில் கடுமையான வெப்பத்தாக்கம் இருந்தது. இதனால வீட்டில் பொதுமக்கள் தூங்குவதற்கு கடும் சிரமம் அடைந்து வந்தனர். இநத்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் வானில் மேகமூட்டம் திரண்டு வந்து திடீரென குளிர்ந்த காற்று வீசியது. அப்போது பலத்த காற்றுடன் மாலை 6 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை விடாமல் சுமார் ஒரு மணி நேரமாக இடியுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. மழையின் காரணமாக கோவை- பொள்ளாச்சி நான்கு வழி சாலை சர்வீஸ் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த வெப்பம் தனிந்து குளிர்ச்சியடைந்தது. நீண்ட நாளுக்கு பிறகு கிணத்துக்கடவு பகுதியில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் நேற்று மாலை 6.30 மணியளவில் வடசித்தூர், காட்டம்பட்டி, கப்பளாங்கரை, நெகமம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கோடை மழை பெய்தது. அதனால் வெப்பம் தனிந்து இதமான காலநிலை நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.