தூத்துக்குடி-மும்பை இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கம்


தூத்துக்குடி-மும்பை இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:46 PM GMT)

தூத்துக்குடி-மும்பை இடையே கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடி

தொழில் நகரமாக விளங்கி வரும் தூத்துக்குடியில் இருந்து சென்னை, கோவைக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று ஓகாவுக்கு விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம்தோறும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டு, காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து உள்ளது. இதனால் கோடைகால சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் மும்பை-தூத்துக்குடி-மும்பை இடையே கோடைகால சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தென்மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. இதனால் தூத்துக்குடி பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த சிறப்பு ரெயில் (எண்: 01143) இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1.15 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு நாளை (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடைகிறது. நாளை மறுநாள் காலை 4 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சிறப்பு ரெயில் (எண்: 01144) புறப்பட்டு வருகிற 29-ந் தேதி மாலை 3.40 மணிக்கு மும்பையை சென்றடைகிறது.

இதேபோன்று வருகிற 2-ந் தேதி மும்பையில் இருந்தும், 4-ந் தேதி தூத்துக்குடியில் இருந்தும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலில் முதல்வகுப்பு ஏ.சி., 2-ம் வகுப்பு ஏ.சி., 3-ம் வகுப்பு ஏ.சி., படுக்கை வசதி மற்றும் பொதுப்பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த ரெயில் தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, பாபநாசம், கும்பகோனம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருத்தணி, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல், ராய்ச்சூர், வாடி, கலபுரகி, சோலாப்பூர், தாண்ட், புனே, லோனவாலா, கல்யாண், தாதர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவல் தென்மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.



Next Story