கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்
16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் என கலெக்டர் மகாபாரதி தகவல் தெரிவித்துள்ளர்
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் மாவட்ட விளையாட்டுப் பயிற்சி மையம் மூலம், 2023-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் இன்று முதல் தொடங்குகிறது. 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோருக்கு மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணைய விளையாட்டரங்கமான ராஜன்தோட்டத்தில் இன்று முதல் வரும் 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விளையாட்டு பயிற்சி முகாமில் தடகளம், கையுந்துபந்து, கால்பந்து, கூடைப்பந்து, மற்றும் ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுக்களுக்கு காலை, மாலை இருவேளைகளிலும் சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்படும். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சியில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படும். எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 16 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், மாணவியர்கள் மற்றும் மாணவரல்லாதோர் அதிக அளவில் கலந்து கொண்டு பயன்பெற கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.