கோடை விடுமுறை முடிந்துபள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள் :மேள, தாளத்துடன் வரவேற்பு


கோடை விடுமுறை முடிந்துபள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவ-மாணவிகள் :மேள, தாளத்துடன் வரவேற்பு
x
தினத்தந்தி 13 Jun 2023 12:15 AM IST (Updated: 13 Jun 2023 3:37 PM IST)
t-max-icont-min-icon

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டதையொட்டி, மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு மேள, தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேனி


பள்ளிகள் திறப்பு

2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான இறுதித்தேர்வு, பொதுத்தேர்வு நடந்து முடிக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோடைவெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது.

6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 12-ந்தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 14-ந்தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் 541 தொடக்கப்பள்ளிகள், 176 நடுநிலைப்பள்ளிகள், 71 உயர்நிலைப்பள்ளிகள், 149 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 940 பள்ளிகள் உள்ளன. தொடக்கப்பள்ளிகள் தவிர்த்து 399 பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

வரவேற்பு

விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகள் உற்சாகமாக பள்ளிகளுக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர், ஆசிரியைகள் வரவேற்றனர். சில பள்ளிகளில் மேள, தாளத்துடன் மாணவ, மாணவிகளுக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பல இடங்களில் இனிப்பு வழங்கி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவ, மாணவிகள் தங்களின் புதிய வகுப்பறையில் அமர்ந்து சக நண்பர்களிடம் விடுமுறை கால அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கம், சுயக்கட்டுப்பாடு, வாழ்வியல் குறித்து இறைவழிப்பாட்டின் போதும், வகுப்பறையிலும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்வேறு கருத்துகளை எடுத்துக் கூறினர்.

பாடப்புத்தகங்கள்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. அதன்படி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்களை தலைமை ஆசிரியர் கருப்பையன் வழங்கினார்.

மற்ற பள்ளிகளிலும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பாடப்புத்தகங்களை வழங்கினர். இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழுவினர் பங்கேற்றனர்.


Next Story