காட்டு யானையை பிடிக்க கூடுதலாக 2 கும்கி யானைகள் வரவழைப்பு
காட்டு யானையை பிடிக்க கூடுதலாக 2 கும்கி யானைகள் வரவழைப்பு
கூடலூர், ஜூன்.8-
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுபாறையை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை கடந்த மாதம் 26-ந் தேதி காட்டு யானை தாக்கி கொன்றது. தொடர்ந்து பாரம் பகுதியில் மற்றொரு காட்டு யானை தாக்கி மும்தாஜ் என்பவர் பலியானார். இதை தொடர்ந்து காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து முதுமலையில் இருந்து விஜய், சங்கர், கிருஷ்ணா, சீனிவாசன் கும்கி யானைகள் உடனடியாக வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தேடும் பணி நடைபெற்றது. பின்னர் ஆரோட்டுப்பாறை, கிளன் வன்ஸ், பாரதி நகர் என காட்டு யானை ஒவ்வொரு நாளும் இடம் மாறி முகாமிட்டு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு இதன் காரணமாக கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். மேலும் முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் தலைமையிலான மருத்துவ குழுவினரும், வனத்துறையினரும் இணைந்து காட்டு யானையை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் முதுமலையில் இருந்து வசிம் என்ற கும்கி யானையும், கோவையில் இருந்து கலிம் என்ற கும்கி யானையும் கூடுதலாக நேற்று ஆரோட்டுபாறைக்கு லாரிகளில் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து சில தினங்களில் காட்டு யானைகளை பிடிக்கும் பணி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.